Description
சிலர் அனுபவங்களைத் தேடி அலைவார்கள். அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள். சிலர், தங்களுக்கென சில நியதிகளை வகுத்து, அவைதான் சிறந்தவை என்று பிடிவாதமாக காலங் கடத்துவார்கள். அனுபவங்கள் மோசமானவையாக இருக்கலாம். அல்லது சிறந்தவையாக இருக்கலாம். ஆனால், இரண்டுமே முக்கியமானவை என்பதை உணர்நது, எதிர்கால சந்ததிக்கு அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்று மிக மிக சிலருக்குத்தான் தோன்றுகிறது. அல்லது வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய மிகச்சிலரில் தனித்தன்மையுடன் நினைக்கப்படுகிறவர் சேகுவேரா. வாழ்க்கையை எப்படியெல்லாம் உபயோகமாக வாழலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமானது அவரது வாழ்க்கை.
“சிறிய சுமை, நடப்பதற்கு வலிமையான கால்கள், பிச்சைக்காரனின் வயிறு மட்டுமே போதும் அம்மா” என்று கூறும் அளவுக்கு திடமான மனதைப் பெற்றிருந்தார் அவர். வளமான வாழ்க்கை தேடி வந்தபோதும், சக மனிதர்களைப் பீடித்திருந்த துயரத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான, சரியான மருந்தைத் தேடி முடிவில்லா பயணம் மேற்கொண்டவர் சே. தென் அமெரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிளிலும், நடந்தும் சுற்றியவர். மத்திய அமெரிக்கா வரை தனது பாதங்களைப் பதித்தவர். சொந்த மக்களின் சுதந்திரமான வாழ்க்கையைப் பறித்து, அவர்களுடைய உழைப்பைத் திருடிக் கொழுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதற்கான மருந்து, ஆயுதப்புரட்சிதான் என்பதை உணர்ந்து காஸ்ட்ரோவுடன் இணைந்தார்.
“நான் என்ற கருத்து, நாம் என்ற கருத்திடம் முழுமையாக பணிந்து விடுதல் என்று ஒரு சொற்றொடர் இருக்கிறது. போராடும் அமைப்பைச் சேர்ந்த அனைவரும் முழுமையாக ஒன்றுபடுவதைக் குறிப்பது இது. முன்பு, முட்டாள்தனமாகவும் பைத்தியக் காரத்தனமாகவும் தோன்றிய இந்தச் சொற்றொடர் இப்போது நினைவுக்கு வருகிறது. இதுதான் கம்யூனிஸ ஒழுக்க நெறி. நாம் என்பதின் துடிப்பை உணர்வதற்கு உதவக்கூடிய அழகான கருவியாக இதுதான் இருக்கிறது.” என்று அம்மாவுக்கு எழுதினார் சே. தான் அறிந்த இந்த உண்மைக்காக உயிரைத் துச்சமெனக் கருதியவர் சே. ஏகாதிபத்தியம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தேடிச் சென்று வேரறுக்கப் போராடிய, தீரமிகு போராளி அவர். காங்கோவிலும், பொலிவியாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்டார். தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த அனுபவங்களை குறிப்புகளாகப் பதிவு செய்துவைத்தார்.
Reviews
There are no reviews yet.