Description
மறுபடியும் ஒரு அறிவியல் நூல் வழியாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி “உள்ளங்கையில் உலகம்” என்ற எனது முதல் அறிவியல் நூலுக்கு, நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. நீங்கள் அளித்த ஆதரவுதான் இரண்டாவது நூலை வெளியிட தூண்டுகோலாக அமைந்தது. பல்துறை அறிவியல் தகவல்களை தமிழில் எளிமையாக தரவேண்டும் என்ற எனது முயற்சி வெற்றி பெறுமா? என்று முதலில் தயங்கினேன்.
“எந்த ஒரு பயணத்திற்கும் முதல் அடிதானே துவக்கம்” முதலில் அடியெடுத்து வைப்போம். பிறகு பார்ப்போம் என்று துணிச்சலாக முதல் நூலை வெளியிட்டேன். அந்த நூலுக்கு நீங்கள் அளித்த ஆதரவும், வழங்கிய பாராட்டும் என்னை திக்குமுக்காடச் செய்தன. ஆனந்த விகடன் வார இதழில் “கற்றதும் பெற்றதும்” பகுதியில் எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் எனது நூலை பாராட்டி எழுதினார். “ஆதனூர் சோழனுக்கு ஒரு வேண்டுகோள். இம்மாதிரியான புத்தகங்களை அதிகம் எழுதவும். கவிதை எழுத மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு ஆயிரம் பேர் இருக்கிறார்கள்”
திரு. சுஜாதா அவர்களின் இந்த வார்த்தைகள் போதாதா? அறிவியலை எளிமையாகத் தருபவர் சுஜாதா. அவரே எனது நடையை அங்கீகரித்து விட்டார். அதுமட்டுமின்றி நிறைய எழுதச் சொல்கிறார். எனக்கு வேறென்ன வேண்டும்? நான் எழுதினேன். எனது பாதை இதுதான் என்று முடிவு செய்து எழுதினேன்.
இணையதளத்தில் கொட்டிக்கிடக்கும் அறிவியல் தகவல்களைப் பொறுக்கிச் சேகரித்தேன். வாழ்க்கைச் சிரமங்கள், பத்திரிகைப் பணி ஆகியவற்றுக்கு இடையே இந்த நூலை வெளியிட முடிவு செய்தேன். அதுதான் இன்னொரு வானம் என்ற இந்த நூல். அறிவியல் உலகின் இன்னொரு வானத்தை இந்த நூல் நிச்சயமாக உங்களுக்குக் காட்டும் என நம்புகிறேன். முழுக்க முழுக்க அறிவியலில் மட்டும் கவனம் செலுத்தும் நிலை வரவேண்டும் என்ற விருப்பத்துடன் இதை வெளியிடுகிறேன்.
Reviews
There are no reviews yet.