Description
மக்கள் தலைவருக்கு இலக்கணம் என்ன?
தயக்கம் சிறிதும் தேவையில்லை. ஜோதிபாசுதான் இலக்கணம். தூய்மையான வாழ்க்கை. களங்கமற்ற சிந்தனை. உறுதியான நடவடிக்கைகள். இதுதான் ஜோதிபாசு. சுயநலம் சிறிதும் இல்லாமல், ஒடுக்கப்படும் மக்களுக்கு அருகிலேயே கடைசிவரை நிற்பவர்கள்தான் மக்கள் தலைவராக மதிக்கப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அருகில், எத்தனை துயரங்கள் வந்தாலும் தாங்கிக்கொண்டு நின்றார் ஜோதிபாசு. மக்களுக்காக உழைக்கிறோம் என்று சொல்லிக் கொண்டால் போதாது. இவர்கள் நமக்காக உழைப்பவர்கள் என்ற நம்பிக்கையை, அவர்களுக்கு ஊட்ட வேண்டும். அவர்களுடைய கஷ்டங்களில் பங்கேற்க வேண்டும். அந்தக் கஷ்டங்களுக்கு காரணம் சொல்ல வேண்டும். சுபிட்சமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவர்களுடைய சுபிட்சத்தை பறித்தவர்களை அடையாளம் காட்ட வேண்டும். பிறகு அந்த மாபாவிகளை எதிர்த்து போராட மக்களை அழைக்க வேண்டும். ஜோதிபாசு அழைத்தார். மக்கள் அணி திரண்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சியை மக்கள் கட்சியாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தார். சொல்லப்போனால் கம்யூனிஸ்ட் கட்சிதான் அவர்களுடைய கட்சி என்று மக்களுக்கு புரிய வைத்தார்.
புரட்சியாளர்கள் தோன்றிய வங்க மண்ணில், வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஜோதிபாசு. லண்டனில் சட்டம் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். 1940 ஆம் ஆண்டுதான் அவர் இந்தியாவுக்கு திரும்பினார். விடுதலைப் போராட்டத்தின் திசை மாறிக் கொண்டிருந்த சமயம் அது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் பெற்ற பயிற்சியை இந்தியாவில் செயல்படுத்த தொடங்கினார். மார்க்சியம்தான் மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் என்று முழுமையாக நம்பினார். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக, தனது முடிவுப்படியே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டார். ஒன்றுபட்ட வங்காளத்தில் தொடங்கிய அவருடைய அரசியல் பணியில், தொடக்கத்திலிருந்தே அவருக்கு வெற்றிதான். எடுத்துக் கொண்ட பணியில் கவனமும், அக்கறையும் இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும். ஜோதிபாசுவிடம் இந்த இரண்டும் இருந்தது. யாரிடம் எதற்காக செல்கிறோமோ, அவர்களுக்கு நமது நோக்கத்தை புரியவைத்துவிட்டால் போதும். அவர்கள் நமக்கு ஆதரவாகவே இருப்பார்கள். சட்டமன்றத்தில் மக்களுக்காக எப்படி பணியாற்ற முடியும், முதலாளித்துவ அரசாங்கங்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை, பாதிக்கப்படும் மக்களுக்கு எப்படி அம்பலப்படுத்தலாம் என்பதற்கு உதாரணமாக இருந்தார்.
Reviews
There are no reviews yet.