Description
தன்னம்பிக்கை…
விடா முயற்சி…
வாய்ப்பை பற்றிக் கொள்ளும் புத்திகூர்மை…
இவை மூன்றும் இருந்தால் எவ்வளவு உயரத்திற்கும் செல்ல முடியும் என்பதற்கு மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணம். அவனுடைய தாய்மண் பிரான்ஸிடம் அடிமையான மூன்று மாதங்கள் கழித்து அவன் பிறந்தான். அடிமைப் படுத்திய தேசத்தின் நிதியுதவியிலேயே படித்தான். அந்த நாட்டு ராணுவத்திலேயே வேலைக்கும் சேர்ந்தான். எப்போதும் தனது தாய்மண்ணின் விடுதலை குறித்தே சிந்தித்தான். உலக சரித்திரத்தின் அத்தனை பக்கங்கங்களையும் சின்ன வயதிலிருந்தே படித்தான். சரித்திர நாயகர்கள், சாதனையாளர்களின் கதைகளை கரைத்துக் குடித்தான். கணிதம், அறிவியல், கலை, கலாச்சாரம் என அத்தனை துறைகளிலும் 18 வயதுக்குள் தெளிவு பெற்றான்.
அந்த நாளில் வாழ்ந்த மிகப்பெரிய கணித மேதைகளையே வியக்கவைக்கும் அளவுக்கு கணிதத்தில் ஆற்றல் பெற்றிருந்தான். யுத்த தந்திரங்களில் அவனுக்கிருந்த அறிவு பிரான்ஸ் ராணுவ அதிகாரிகளைக் கவர்ந்து இழுத்தது. மிகச் சிறிய வயதிலேயே, ராணுவத்தின் முக்கிய பொறுப்புக்கு உயர்த்தப்பட்டான். இருந்தாலும், அப்போது பிரான்ஸில் ஏற்பட்ட புரட்சியைப் பயன்படுத்தி, தனது தாய்மண்ணை விடுவிக்கவே விரும்பினான். 20 வயதில், தனது தாய்மண் கோர்ஸிகா தீவின் மக்கள் அவன் பின்னே அணிவகுத்தனர். மாபெரும் தேசத்தின் புரட்சிக்கு நடுவே சத்தமில்லாமல் தனது தீவுக்கு விடுதலை பெற்றுத் தந்தான். ஆம் அவனுடைய தன்னம்பிக்கையும், வாய்ப்பை உரிய சமயத்தில் பற்றிக் கொள்ளும் புத்திகூர்மையுமே அவனுக்கு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தது. ஆனால், நாட்டை விட்டு வெளியேறிய தலைவர்கள் விடுதலையின் பலனை அனுபவித்தபோது அவர்களை எதிர்த்து அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
சொந்த நாட்டிலிருந்து குடும்பத்தோடு விரட்டப்பட்டாலும், அவன் சோர்ந்துவிடவில்லை. எந்த நாட்டை எதிரியாக கருதினானோ, அந்த நாட்டையே தனது சொந்த நாடாக ஏற்றுக் கொண்டு அங்கு தனது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினான். அவனுடைய அறிவையும் வீரத்தையும் பிரான்ஸின் புரட்சியாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். இத்தாலியை பூர்வீகமாகக் கொண்டு, கோர்ஸிகாவில் குடியேறிய கூட்டத்தைச் சேர்ந்தவன் நெப்போலியன். இத்தாலி மொழிபேசிய அவன் இத்தாலியையே தனது வீரத்தால் ஜெயித்து பிரான்ஸுக்கு கீழ் கொண்டுவந்தான். அவனுடைய யுத்தம் அதுவரை வரலாறு கண்டிருந்த யுத்தங்களுக்கு மாறாக இருந்தது. முடியரசுகளின் கீழ் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த மக்களை விடுவிக்கவே அவனுடயை யுத்தம் பயன்பட்டது.
Reviews
There are no reviews yet.