அடிமைப்படுவது இரண்டு வகை. அன்னியப் படையெடுப்பில் தோற்று அடிமைப்படுவது. தோற்றவர்கள் ஜெயித்தவர்களின் சொந்த நாட்டுக்குப் போய், அங்கே அவர்களுக்கு சேவகம் செய்வது. அடிமைப்படுத்துவதிலும் இரண்டு வகை உண்டு. படையெடுத்து நேருக்கு நேர் சந்தித்து தோற்கடித்து அடிமைப்படுத்துவது. வர்த்தகம் செய்வதற்காக அனுமதி வாங்கி, ஆள்வோரைக் கடனாளியாக்கி அவர்களுடைய நாட்டை மறைமுகமாக விழுங்குவது. அமெரிக்கா என்ற மிகப்பெரிய நிலப்பரப்பை கண்டு பிடித்தவர்கள், அந்த மண்ணின் பூர்வகுடிகளை துப்பாக்கிகளால் அடிமைப் படுத்தினார்கள். அவர்களைக் கொண்டே அவர்களுடைய மண்ணின் வளங்களைக் கொள்ளையடித்தார்கள்.
பூர்வகுடிகள் அழிந்தபிறகு, ஆப்பிரிக்க காடுகளில் வசித்த கறுப்பு இன மக்களை விலங்குகளைப் போல வேட்டையாடி பண்ணைகளிலும் வீடுகளிலும் சவட்டி எடுத்தனர். 200 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் விலங்குகளிலும் கேவலமாக நடத்தப்பட்டனர். நமக்காக உழைக்கும் மாடுகளுக்குக் கூட அதன் உழைப்புக்குத் தகுந்தபடி இரை போடுவோம். ஒரு நோய் வந்தால் மருத்துவம் பார்ப்போம். ஆனால், கறுப்பின மக்களுக்கு சரியான உணவு கூட கொடுக்கமாட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தால்தானே தொடர்ந்து தனக்காக உழைக்க முடியும் என்ற குறைந்தபட்ச சிந்தனை கூட வெள்ளைக்காரர்களுக்கு இருக்காது. கொடுத்த விலைக்கு மேல் அந்த அடிமை உழைத்தால் போதும். அவனுக்கு எதற்காக உணவுச் செலவு, வைத்தியச் செலவு என்கிற மனப்பான்மைதான் வெள்ளைக்காரர்களுக்கு இருந்தது. கறுப்பின மக்களுக்கு வெள்ளைக்காரர்கள் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. இனி அடிமைகள் யாரும் இங்கில்லை என்று பெயரளவுக்கு சட்டம் இயற்றுவதற்கு 200 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஆப்ரகாம் லிங்கன்தான் அந்தச் சட்டத்தை இயற்றினார். ஆனால், சட்டத்தை தூக்கி அலமாரியில் வைத்துவிட்டு மீண்டும் தங்கள் எஜமான் மனப்பான்மையுடன்தான் வெள்ளைக்காரர்கள் நடந்துகொண்டார்கள். ஆட்சி அதிகாரம் பற்றியெல்லாம் அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏனென்றால், வாக்குரிமைகூட அவர்களுக்கு இல்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல கறுப்பின மக்களுடன் வெள்ளை இனத்தவரில் சிலரும் கலக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த கலப்பின மக்களும், கறுப்பின மக்கள்தான் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். நீக்ரோ என்று அழைக்கப்பட்ட அவர்கள், தங்களை நீக்ரோ என்று அழைக்கக்கூடாது. கறுப்பர்கள் அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றுதான் அழைக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நிலைக்கு உயர்ந்தார்கள். அடிமைப்படுத்திய தேசத்தின் கவுரவம் உலக அளவில் எல்லாத் துறைகளிலும் உயர்ந்து நிற்க காரணமானார்கள். இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அமரமுடியும் என்ற நிலை நீடித்தது.
Reviews
There are no reviews yet.