Description
நம்மைச் சுற்றி இயற்கை அளித்த கொடைகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், அவற்றை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளத் தவறுகிறோம். நமது வளமான வாழ்வுக்கு மிகவும் அத்தியாவசிய மானது உடல் ஆரோக்கியம். ஆரோக்கியத்திற்கு தேவையானது அளவான சத்தான உணவு. ஃபாஸ்ட்புட் உலகத்தில் கிடைத்ததை சாப்பிடுகிறோம். அதையும் அளவில்லாமல் சாப்பிட்டு, நமது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். நமது சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற காய்கறிகளும், பழங்களும் அந்தந்த பருவத்தில் ஏராளமாக விளைகின்றன. உணவோடு சேர்த்துக் கொள்கிற காய்கறிகள், உணவாகவே பயன்படுத்தக் கூடிய பழங்கள் என இயற்கை ஏராளமான கொடைகளை அளித்துள்ளது. ஒரு மணிதன் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு தேவையான சக்தியை வெறும் பால் மற்றும் முட்டையிலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நம்மில் பெரும்பாலோர் உணவை அரைத்து வயிற்றுக்குள் தள்ளும் இயந்திரங்களாகவே இருக்கிறோம். இதன்காரணமாக தேவையற்ற தொந்தரவுகளை வாங்கிக் கொள்கிறோம். நடக்கவே மூச்சுத் திணறும் அளவுக்கு உடல் பருத்து, உறுப்புகள் சுமூகமாக இயங்க முடியாத அளவுக்கு செய்துவிடுகிறோம். சுறுசுறுப்பாக இயங்கமுடியாமல் தத்தளிக்கும் வாழ்க்கை நமக்கு எதற்கு?
வாழும்வரை உற்சாகமாக வாழ்வதற்கு, ஆயுர்வேதம் எளிதான வைத்திய முறைகளை அளிக்கிறது. நம்மைச் சுற்றி விளையும் காய்கறிகள், மற்றும் பழங்கள் நமக்கு அளிக்கும் பலன்களை தெரிந்துகொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். ஆரோக்கியத்தின் விலை இவ்வளவு மலிவா? என்று திகைத்துப் போவீர்கள். நிஜம்தான். நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழம், மாதுளை உள்ளிட்ட பழங்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொண்டால் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. அதுபோலத்தான், காய்கறிகள், பருப்பு, பயறு, கீரை போன்றவையும். இவற்றை எப்படி மருந்தாக பயன்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை இந்தப் புத்தகம் எளிமையாக சொல்லித்தருகிறது. இதுவரை நாம் அறியாமல் போன பல விஷயங்களை இந்தப் புத்தகம் வெளிக்கொண்டு வருகிறது.
நல்ல நண்பனைப் போல இது உங்கள் வாழ்க்கைக்கு உதவிகரமாக அமையும் என்பது மட்டும்நிச்சயம். தேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ள, பழங்களின் மருத்துவ பலன்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டால், இனி கண்டதையும் வாங்கி வயிற்றுக்குள் திணிக்கும் கொடுமையை தவிர்ப்பீர்கள். அப்படி தவிர்க்கும்போது நலவாழ்வு உங்களுக்கு உத்தரவாதம்.
Reviews
There are no reviews yet.