“எனது எதிரிதான் நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறான்” –மாவோ
“சிங்களர்களுக்கு ஆயுத மொழிதான் புரியும்” –பிரபாகரன்
தமிழர்களின் வீரம் குறித்து சங்க இலக்கியங்களில் கூறப்பட்டவற்றைப் படித்திருக்கிறேன். உலக வரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய தலைவர்களின் வரலாற்றையும் படித்திருக்கிறேன். 70களின் இறுதியிலும் 80களின் மத்தியிலும் தமிழகத்தில் நடைபெற்ற ஈழ ஆதரவுப் போராட்டங்களில் இளைஞனாக பங்கேற்றிருக்கிறேன். அமைதி ஒப்பந்தம் என்ற பெயரில் அந்தப் போராட்டம் திசை திருப்பப்பட்ட சமயத்தில், எனக்கு விபரீதம் புரியவில்லை. ஆனால், அமைதிப் படை இலங்கை ராணுவத்தைக் காட்டிலும் மோசமாக நடந்துகொண்ட விபரங்களை அறிந்தபோது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு சரியெனப்பட்டது. நாடு திரும்பிய அமைதிப்படையை கலைஞர் வரவேற்கவில்லை என்றபோது சந்தோஷம் ஏற்பட்டது.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் காங்கிரஸ்காரர்களின் அட்டூழியம் தொடங்கிவிட்டது. திமுகவினரின் சொத்துக்களை சூறையாடி, சிங்களர்களின் கொடூரம் எப்படி இருந்திருக்கும் என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். அத்தகைய தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. இருந்தாலும், இனி, ஈழப்போராட்டம் ஒடுக்கப்பட்டுவிடும் என்ற எண்ணம் வேதனை அளித்தது. ஆனால், எல்லாவற்றையும் மீறி, அந்தப் போராட்டம் வலுவடைந்தது. தமிழீழ அரசாங்கம் அமைத்து, இறையாண்மை மிக்க ஒரு நாட்டுக்கு இருக்கும் அத்தனை வசதிகளையும் பிரபாகரன் ஏற்படுத்திய போது மலைப்பாக இருந்தது.
தமிழீழம் மலர்வது உறுதி. இலங்கையில் தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்து உலக தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கை துளிர்த்தது. நார்வே தூதுக்குழு ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தம் தமிழர்களுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தித் தரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அமைதி ஒப்பந்தம் குப்பையில் போடப்பட்டபோது மீண்டும் கவலை சூழ்ந்தது. விமானப்படை அமைத்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியபோது மலைப்பு ஏற்பட்டது. ராணுவ முகாம்களை மட்டுமே இலக்காக கொண்டு புலிகள் தாக்குதல் நடத்தினர். இலங்கை ராணுவம் பொதுமக்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது. இந்த அநியாயத்தை யாருமே கேட்க முன்வரவில்லை. அதுதான் உலகம் முழுவதும் வாழும் தமிழனுக்கு வேதனையை ஏற்படுத்தியது. தாய்த் தமிழகமும் கூட ஈழத்தமிழனின் வேதனையை வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் இருந்தது. இதோ, ஏழு நாடுகளின் உதவியோடு ஒரு இனத்தை முற்றிலுமாக அடையாளம் இல்லாமல் அழிக்கும் முயற்சியில் முதல்கட்டமாக வெற்றி பெற்றிருக்கிறது இலங்கை.
Reviews
There are no reviews yet.